Monday, September 27, 2010

இன்னும் வெடிக்கும்...! - இலங்கைக்கு வெடிமருந்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கொழும்பு: கிழக்கு இலங்கையில் கரடியனாறு காவல் நிலையத்தில் வெடிமருந்துகள் வெடித்து 27 பேரைப் பலி வாங்கியதைப் போன்ற சம்பவங்கள் மேலும் நடக்க வாய்ப்புள்ளது. அதற்குள் அரசு விழிப்படைந்து போலீஸ் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள வெடிமருந்துகளை..
அகற்றுவதுதான் பாதுகாப்பானது, என்று வெடிமருந்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.


இலங்கையில் சமீபத்தில் கரடியனாறு என்ற இடத்தில் உள்ள காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் எதிர்பாராதவிதமாக வெடித்தன. இதில் 27 போலீசார் உயிரிழந்தனர். 40க்கும் அதிகமான பொதுமக்கள் பலியாகினர். இவர்கள் வபோலீசாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப்புலிகள் என்று கூறப்படுகிறது. சாலை கட்டுமான பணிகளுக்காக சீன நிறுவனம் ஒன்றால், காவல்நிலையத்தில் இந்த வெடிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.


இதுகுறித்து இலங்கையைச் சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரியும் வெடிகுண்டு நிபுணருமான ஒருவர் கூறியதாக பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தியில், "இலங்கையில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு பணிகளுக்காக வெடிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 80 சதவீத காவல் நிலையங்களில் உள்ள வெடிபொருட்கள் பாதுகாப்பற்ற முறையில்தான் வைக்கப்பட்டுள்ளன.


இரண்டு லட்சம் கிலோ வெடிபொருட்கள், எந்தவித பாதுகாப்பும் இன்றி இலங்கையின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன. எனவே, கரடியனாறில் நடந்தது போன்ற, மேலும் பல வெடிவிபத்துகள் எதிர்காலத்தில் நிகழும் அபாயம் நிலவுகிறது. இதை தவிர்க்க, காவல் நிலையங்களில் உள்ள வெடிபொருட்களை, சேமிப்பு கிடங்குகளுக்கு மாற்றுவதே சிறந்தது. இலங்கை அரசு இந்த விஷயத்தில் மெத்தனம் காட்டினால், இதுபோன்ற சம்பவங்கள் இன்னும் நடக்கலாம்", என்று எச்சரித்துள்ளதாகத் தெரிகிறது.

No comments:

Post a Comment

Site Meter